அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் மடிக்கணினி வழங்க கோரி முன்னாள் மாணவர்கள் சாலை மறியல்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், மடிக்கணினி வழங்க கோரி முன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-19 23:00 GMT
தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் (2018-19) பிளஸ்-2 படித்த மாணவர்கள் 5,935 பேருக்கு கடந்த 2 நாட்களாக விலையில்லா மடிக்கணினிகள், அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் முதல் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று அந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் மடிக்கணினி களை வழங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த பள்ளியில் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள், பள்ளிக்கு வந்து தங்களுக்கும் மடிக்கணினி வழங்குமாறு கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள், கடந்த 2017-18-ம் ஆண்டில் படித்தவர்களுக்கு மடிக்கணினி வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். அப்போது, எங்களை போன்ற முன்னாள் பள்ளி மாணவர்களும் மடிக்கணினியை பெற்றுக்கொள்ளலாம் என்று ஊடகங்களில் அறிவிப்பு வந்துள்ளதே என்று, அவர்கள் கேட்டுள்ளனர். இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் கேட்டுக்கொள்ளுமாறு அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

சாலை மறியல்

இதையடுத்து அந்த மாணவர்கள், தங்களுக்கும் மடிக்கணினி வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்க, கலெக்டர் அலுவலகம் வந்தனர். ஆனால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மனுவை பெட்டியில் போட்டுவிட்டு செல்லுங்கள் என்று அங்குள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதனால் மாவட்ட கலெக்டரை சந்தித்தால், தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்து ஏமாற்றம் அடைந்த முன்னாள் மாணவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்லூரியில் படிக்கும்போது மடிக்கணினி கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று, அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, இன்ஸ்பெக்டர் சிவராஜ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துகிரு‌‌ஷ்ணன் மற்றும் தாசில்தார் கதிரவ் ஆகியோர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, மடிக்கணினி வந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னாள் மாணவர்கள் சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் ஜெயங்கொண்டம்- அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்