கண்ணமங்கலம் அருகே, மரத்தில் கார் மோதி 2 பேர் பலி

கண்ணமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-12-19 22:15 GMT
கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 44). இவர், அதே பகுதியில் உள்ள கார்மெண்ட்ஸ் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார். அவருடைய கம்பெனி உரிமையாளர் சுகுமாரன் என்பவருக்கு சொந்தமான காரில் அன்பழகனும், இவரது நண்பர் அதே ஊரை கேசவன் (65) என்பவரும் நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் இரவு 11 மணி அளவில் வீடு திரும்பினர். காரை அன்பழகன் ஓட்டினார்.

கண்ணமங்கலம் அருகே அய்யம்பாளையம்-திருவண்ணாமலை மெயின் ரோட்டில் கூட்டுரோடு பகுதியில் உள்ள தனியார் ஐ.டி.ஐ. அருகே வந்த போது திடீரென சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது கார் மோதியது. இதில் அன்பழகன், கேசவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த அன்பழகனுக்கு வரலட்சுமி (39) என்ற மனைவியும், ஜெயஸ்ரீ (10) என்ற மகளும், லித்தீஷ் (8) என்ற மகனும் உள்ளனர்.

அதேபோல் கேசவனுக்கு ராஜலட்சுமி (55) என்ற மனைவியும், ஜீவகுமார், ஜோதிபிரகாஷ் என 2 மகன்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்