அய்யலூரில், சாலையோர கடை அமைப்பதில் வியாபாரிகள் திடீர் மோதல்

அய்யலூரில், சாலையோர கடைகள் அமைப்பதில் வியாபாரிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2019-12-19 22:15 GMT
வடமதுரை,

திண்டுக்கல்–திருச்சி நான்கு வழிச்சாலையில் வடமதுரையை அடுத்த அய்யலூர் பஸ்நிறுத்தம் அருகே மேம்பாலம் உள்ளது. இதன் அடிப்பகுதியில் சாலையோரத்தில் கடைகளை அமைத்து சிலர் வியாபாரம் செய்து வந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் புகார் கூறினர்.

இதன் எதிரொலியாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடி ஊழியர்கள் இணைந்து அய்யலூர் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். அதன்பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.

இந்தநிலையில் அய்யலூரில் வாரச்சந்தை நேற்று நடந்தது. அங்கு வந்த வியாபாரிகள் சிலர், மேம்பாலத்தின் அடிப்பகுதியை ஆக்கிரமித்து மீண்டும் கடைகளை அமைத்தனர். அப்போது, கடை வைப்பது தொடர்பாக வியாபாரிகளுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், 2 தரப்பாக பிரிந்து வியாபாரிகள் மோதிக்கொண்டனர்.

இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

மேலும் மேம்பாலத்தின் அடிப்பகுதியிலும், சாலையோரத்திலும் யாரும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்