வருகிற ஜனவரி 2-ந் தேதி பிரதமர் மோடி கர்நாடகம் வருகிறார்; முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
“பிரதமர் மோடி வருகிற ஜனவரி 2-ந் தேதி கர்நாடகம் வருகிறார். அப்போது பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் அவர் பேசுவார்” என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தார்வார் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு திட்டமாக நிறைவு செய்வோம். விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் பாடுபட்டு வருகிறோம். விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுப்போம். இடைத்தேர்தலில் பா.ஜனதா 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. இதனால் மீதமுள்ள ஆட்சி காலத்தை எந்த பிரச்சினையும் இன்றி நிறைவு செய்வோம்.
இன்னும் 6 மாதங்களில் கர்நாடகம் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை காணும். இந்த மாத இறுதியில் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி, கட்சியின் தலைவர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேச இருக்கிறேன். அதன் பிறகு மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும். இதில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும்.
பிரதமர் மோடி ஜனவரி மாதம் 2-ந் தேதி கர்நாடகம் வருகிறார். 3-ந் தேதி பா.ஜனதா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் மோடியை பேசவைக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். மகதாயி நீர் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதுகுறித்து கோவா மற்றும் மத்திய அரசுடன் பேசி தீர்வு காணப்படும்.
நிர்பயா கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். மறுஆய்வு மனுவை ஒரே நாளில் விசாரித்து தீர்ப்பு வழங்கியது, இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
முன்னதாக தார்வார் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடியூரப்பாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. எடியூரப்பாவுடன் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர், கனிம வளர்ச்சித்துறை மந்திரி சி.சி.பட்டீல் ஆகியோர் இருந்தனர்.