கோபி அருகே, மூதாட்டியிடம் நூதன முறையில் நகை அபேஸ்

கோபி அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை அபேஸ் செய்துவிட்டு மோட்டார்சைக்கிள்களில் தப்பித்து சென்ற மர்மநபர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-12-18 22:30 GMT
பெருந்துறை, 

கோபி அருகே உள்ள கடுக்கான்பாளையத்தை சேர்ந்தவர் மாரப்பன். அவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 70). இவர்களுடைய பேத்தி நதியா. இவர் திருமணம் ஆகி குடும்பத்துடன் கவுந்தப்பாடி அருகே உள்ள பாண்டியாம்பாளையத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் முத்துலட்சுமி பாண்டியாம்பாளையத்தில் உள்ள பேத்தியின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவரை பார்த்துவிட்டு் சம்பவத்தன்று மதியம் 3 மணி அளவில் கடுக்கான்பாளையம் செல்ல பஸ் ஏறுவதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் வந்து காத்து நின்றார்.

அப்போது அந்த வழியாக 2 மோட்டார்சைக்கிள்களில் மர்மநபர்கள் 3 பேர் வந்தனர். அவர்கள் முத்துலட்சுமியின் அருகில் வந்ததும் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். ‘நீங்கள் தங்க சங்கிலி அணிந்திருக்கிறீர்கள். யாராவது பார்த்தால் தங்க சங்கிலியை பறித்துவிட்டு சென்று விடுவார்கள். எனவே அதை கழற்றி எங்களிடம் கொடுங்கள். நாங்கள் பாதுகாப்பாக அதை ஒரு பொட்டலத்தில் வைத்து தருகிறோம்’ என்றனர்.

உடனே மூதாட்டி தான் அணிந்திருந்த 5½ பவுன் தங்கசங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட அவர்கள் அந்த தங்கசங்கிலியை ஒரு பொட்டலத்தில் மடிப்பது போல் மடித்து நைசாக நகையை அபேஸ் செய்தனர். பின்னர் முத்துலட்சுமியிடம் வெற்று பொட்டலத்தில் நகை வைத்து கொடுப்பது போல் கொடுத்துவிட்டு் அங்கிருந்து மோட்டார்சைக்கிள்களில் தப்பித்து சென்றனர்.

அதைத்தொடர்ந்து பஸ் ஏறி முத்துலட்சுமி கடுக்கான்பாளையத்துக்கு சென்றார். பஸ்சை விட்டு இறங்கியதும் அவர் பொட்டலத்தை பிரித்து பார்த்தார். அதில் நகை இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதுகுறித்து திங்களூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை அபேஸ் செய்துவிட்டு மோட்டார்சைக்கிள்களில் தப்பித்து சென்ற மர்மநபர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்