சாத்தான்குளம் அருகே, ‘ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
சாத்தான்குளம் அருகே ‘ஓட்டு விற்பனைக்கு அல்ல‘ என்று போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தான்குளம்,
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் நீங்கலாக, ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதையொட்டி பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடை செய்யும் வகையில், தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் பஞ்சாயத்து வள்ளியம்மாள்புரம், முத்துகிருஷ்ணாபுரம், ஆலடித்தட்டு ஆகிய கிராம மக்கள், இளைஞர்கள் சார்பில், அப்பகுதியில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், ‘எங்களது ஓட்டு விற்பனைக்கு அல்ல‘ என்று எழுதப்பட்டு இருந்தது. இது தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வழங்கி வாக்குகளை பெறலாம் என்று கருதிய வேட்பாளர்கள் இடையே கலக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.