குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த முகம்மதுஜான் எம்.பி.வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்கு அளித்ததை ஒட்டி ஜமாத் காப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட முகம்மதுஜான் எம்.பி.யின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிப்காட் (ராணிப்பேட்டை),
அ.தி.மு.க.வின் சிறுபான்மையினர் நல பிரிவு மாநில இணை செயலாளராக இருப்பவர் முகம்மதுஜான். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ள இவர் ராணிப்பேட்டையை சேர்ந்தவராவார். மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றியபின்னர் அதனை மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு கொண்டு வந்தது. அ.தி.மு.க. தலைமை உத்தரவுப்படி இந்த மசோதாவுக்கு ஆதரவாக இவர் வாக்களித்தார்.
பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில் தமிழகத்திலும் தி.மு.க.கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்து வாக்களித்த முகம்மதுஜான் எம்.பி.க்கும் எதிர்ப்புகள் வந்தன. அவர் ராணிப்பேட்டையில் உள்ள அனைத்து சர்ஜமாத் அமைப்பின் காப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார். அவரை அந்த பொறுப்பில் இருந்து ரணிப்பேட்டை சர்ஜமாத் அமைப்பு நீக்கியது.
இந்த நிலையில் சில முஸ்லிம் அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் ராணிப்பேட்டையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட போவதாக கூறப்பட்டது. இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்பேரில் முகம்மதுஜான் எம்.பி. வீட்டிற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் முகம்மதுஜான் எம்.பி.க்கு, தென் இந்திய இஸ்லாமிய கூட்டமைப்பு, தமிழக இமாம் அசோசியேசன், தென்இந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேசன் உள்பட பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் நேரிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
நாகூர் தர்கா பிரசிடெண்ட் கலீபா சாஹிப் என்பவரும் முகம்மதுஜான் எம்.பிக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து முகம்மதுஜான் எம்.பி.யிடம் கேட்டபோது, ‘‘மத்திய அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தினால் இந்தியாவில் வாழும் முஸ்லிம் உள்பட எந்த ஒரு சிறுபான்மையினருக்கும் பாதிப்பு கிடையாது. நான் சார்ந்துள்ள அ.தி.மு.க., சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்கம் ஆகும். தமிழ்நாடு முதல்- அமைச்சர், துணை முதல் -அமைச்சர் ஆகியோர் உத்தரவுப்படியும், கட்சியின் கொறடா உத்தரவுப்படியும், சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்கு அளித்தேன். முஸ்லிம் சகோதரர்களும், அனைத்து சிறுபான்மைமக்களும் மற்ற சமூக மக்களும் எனக்கும், நான் சார்ந்துள்ள அ.தி.மு.க.விற்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். அ.தி.மு.க.வையும், என்னையும் பிடிக்காத ஒரு சிலரின் தூண்டுதலே இந்த எதிர்ப்புக்கு காரணம் ’’என்றார்.