மின்விளக்கை கழற்றும் போது அலங்கார வளைவில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

நாகர்கோவில் அருகே மின்விளக்கை கழற்றும் போது அலங்கார வளைவில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

Update: 2019-12-17 22:15 GMT
ஈத்தாமொழி,

நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன்புதூர் அருகே செம்பொன்கரையை சேர்ந்தவர் பாஸ்கரன். இவருடைய மகன் சசிகுமார் (வயது 34), தொழிலாளி. இவர், சியோன்புரத்தை சேர்ந்த ஜெயலெனின் என்பவரின் சவுண்ட் சர்வீசில் வேலை செய்து வந்தார்.

நேற்று வடக்கு சூரங்குடி அருகே உள்ள கோவிலில் திருவிழா முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த அலங்கார வளைவில் ஏறி, மின்விளக்குகளை சசிகுமார் கழற்றியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கீழே தவறி விழுந்தார்.

இதில் தலை மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்த சசிகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி ஈத்தாமொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சசிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஈத்தாமொழி சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தி வருகிறார்.

அலங்கார வளைவில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்