காட்பாடி பகுதியில் போலீஸ் சீருடை அணிந்து பணம்பறித்த 2 போலி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது

காட்பாடி பகுதியில் போலீஸ் சீருடை அணிந்து பணம் பறித்த 2 போலி சி.பி.ஐ. அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-17 23:00 GMT
காட்பாடி, 

காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்தவர் கிருபாகரன். இவர் நேற்றுமுன்தினம் அங்குள்ள மெயின்ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது டிப்டாப்பாக போலீஸ் சீருடை அணிந்த 2 பேர் அவரை வழிமடக்கி தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறி அடையாள அட்டையை காண்பித்துள்ளனர்.

மேலும் மோட்டார்சைக்கிளுக்கான ஆவணங்களை காட்டுமாறு கூறி உள்ளனர். ஆனால் அவர்கள்மீது கிருபாகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களிடமிருந்து நழுவிய அவர் இதுகுறித்து விருதம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்ததும் துணைபோலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் தருமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றனர்.

ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறியவர்கள் அங்கு இல்லை. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் தேடினர். அப்போது அவர்கள் கழிஞ்சூர் பன்னீர்செல்வம் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்குசென்று அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விருதம்பட்டை சேர்ந்த மத்தீன் (வயது43), அரிகரன் (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் போன்று நடித்து பணம்பறித்ததும் தெரியவந்தது. அவர்கள் பதுங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தியபோது போலீஸ் சீருடைகள், போலி அடையாள அட்டைகள், ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் இருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

பணம் மற்றவர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்டதா என்று விசாரித்தபோது அந்த பணத்திற்கு அவர்கள் சரியான கணக்கு காட்டியதால், பணத்தை அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய சீருடையில் துப்பாக்கி வைக்கக்கூடிய பவுச் இருந்தது. இதனால் வீட்டில் துப்பாக்கி இருக்கிறதா என்று வீடுமுழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் துப்பாக்கி எதுவும் சிக்கவில்லை. அரிகரன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையில அவருடைய பெயருக்கு பின்னால் ஐ.பி.எஸ். என்று உள்ளது.

மேலும் அவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் சமையல் வேலை செய்துவந்ததும் தெரியவந்தது. இருவரும் போலீஸ் சீருடை அணிந்து இருக்கும் புகைப்படத்தை முகநூலிலும் வெளியிட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்