சாலையோரம் தூங்கிய கூலித்தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு கொலை
வியாசர்பாடியில் சாலையோரம் குடிபோதையில் தூங்கிய கூலித்தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து தப்பி ஓடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பூர்,
வியாசர்பாடி உதயசூரியன் நகர் 18-வது பிளாக்கை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் சவுந்தர் (வயது 37). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சவுந்தர் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரி அருகே கணேசபுரம் சாலையோரம் மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த யாரோ மர்மநபர் ஒருவர் சவுந்தர் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு ஓடிவிட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து ரத்தவெள்ளத்தில் தலை நசுங்கி சாலையோரம் இறந்து கிடந்த சவுந்தரின் உடலை, நேற்று காலை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வியாசர்பாடி போலீசார் சவுந்தரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக் காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவுகளை ஆய்வு செய்து, கொலை செய்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.