குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு, கோவையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - திரளானவர்கள் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2019-12-17 22:00 GMT
கோவை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகே கோவை மாநகர், புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. சொத்து பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கார்த்திக் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மத்திய பாரதீய ஜனதா அரசு துரோகம் இழைத்து விட்டது. இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். டெல்லி மேல்-சபையில் அ.தி.மு.க. ஆதரவு அளிக்காமல் இருந்து இருந்தால் இந்த சட்டம் நிறைவேறி இருக்காது. முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் அ.தி.மு.க. வரலாற்று தவறை இழைத்துவிட்டது. இதனை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது.

இந்த சட்ட திருத்தத்தை வாபஸ் பெறும்வரை தி.மு.க. தொடர்ந்து போராடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேசும்போது, மத்திய பாரதீய ஜனதா அரசின் செயல்பாட்டினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தில் மந்தநிலையை திசை திருப்ப, இதுபோன்ற சட்ட திருத்தங்களை கொண்டு வந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. முத்தலாக் மசோதாவினால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் துரோகத்தை செய்துள்ளது. இதற்கு அ.தி.மு.க.வும் உடந்தையாக இருப்பது துரோகமாகும் என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. அருண்குமார், நிர்வாகிகள் முத்துசாமி, நாச்சிமுத்து, நந்தகுமார், கோட்டை அப்பாஸ், கார்த்திக் செல்வராஜ், வக்கீல்கள் கே.எம்.தண்டபாணி, அருள்மொழி, மகுடபதி மற்றும் மெட்டல் மணி, டாக்டர் ஆர்.கணேஷ், முருகவேல், வெங்கடேஷ், தினேஷ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்