உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ‘சீட்’ தராததால் சேலம் பா.ம.க. அலுவலகத்தில் 2 பிரமுகர்கள் தீக்குளிக்க முயற்சி
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ‘சீட்’ தராததால் சேலத்தில் பா.ம.க. கட்சி அலுவலகத்தில் 2 பிரமுகர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்,
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முடிவடைந்தது.
இதையொட்டி வேட்பாளர்கள் போட்டி, போட்டு வேட்பு மனுதாக்கல் செய்தனர். முன்னதாக இந்த தேர்தல் தொடர்பாக சேலம் அஸ்தம்பட்டி அருண்நகரில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்கு வந்த வீரபாண்டியை சேர்ந்த பா.ம.க. பிரமுகர்கள் துரை, சின்னப்பன் ஆகிய 2 பேர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட தங்களுக்கு சீட் வழங்க வேண்டும் என நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். ஆனால் அந்த இடம் கூட்டணியில் தங்களுக்கு வழங்கவில்லை என்பதால் சீட் தரமுடியாது என்று நிர்வாகிகள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து தங்களுக்கு போட்டியிட ‘சீட்’ தராததால் அவர்கள் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதை பார்த்து அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து உடனடியாக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அருள், மாவட்ட தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறித்து, தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து அவர்களிடம் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், நீங்கள் போட்டியிட விரும்பும் பதவி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் நாம் அங்கு போட்டியிட முடியாது. எனவே அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் ‘சீட்’ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி சமாதானப்படுத்தினர். மேலும் இதுபோன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட கூடாது என்றனர். இந்த சம்பவம் பா.ம.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.