சகாலா திட்டத்தின் கீழ் தலைமை செயலக சேவைகள் விரைவில் சேர்க்கப்படும்; பள்ளி கல்வித்துறை மந்திரி தகவல்

சகாலா திட்டத்தின் கீழ் தலைமை செயலக சேவைகள் விரைவில் சேர்க்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

Update: 2019-12-16 23:00 GMT
பெங்களூரு, 

பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று சகாலா திட்டத்தில் அக்டோபர், நவம்பர் மாத அறிக்கைகளை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மாநில அரசின் தலைமை செயலக சேவைகளையும் சகாலா திட்டத்தின் கீழ் கொண்டுவர முதல்-மந்திரி எடியூரப்பா ஒப்புதல் வழங்கியுள்ளார். அந்த சேவைகள் விரைவில் இந்த திட்டத்தில் சேர்க்கப்படும். இந்த திட்டத்தை மேலும் தீவிரமாக அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். குறித்த காலக்கெடுவுக்குள் மக்களுக்கு சேவை கிடைக்க வேண்டும்.

அரசின் சேவைகள் மக்களுக்கு கிடைக்காமல் இருக்கக்கூடாது. அரசின் சேவைகள் மக்களுக்கு குறித்த காலத்திற்குள் கிடைக்க வேண்டும் என்பது தான் இந்த சகாலா திட்டத்தின் நோக்கமே. சதானந்தகவுடா முதல்-மந்திரியாக இருந்தபோது கடந்த 2012-ம் ஆண்டு இந்த சகாலா திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது தொடக்கத்தில் 151 சேவைகள் வழங்கப்பட்டன. இப்போது 91 துறைகளை சேர்த்து 1,033 சேவைகள் மக்களுக்கு இந்த திட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 20.51 கோடி மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 20.45 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 96.91 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 96.40 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சட்டசபை இடைத்தேர்தல் காரணமாக நவம்பரில் மனுக்கள் மீதான தீர்வு காணுதல் குறைந்துள்ளது.அக்டோபரில் மனுக்கள் மீது தீர்வு கண்டதில் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் முதலிடத்தையும், சாம்ராஜ்நகர் 2-வது இடத்தையும், உடுப்பி 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. பெங்களூரு 30-வது இடத்தை பிடித்துள்ளது.

இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்