தரமணி டைட்டல் பார்க்கில் பஸ் நிறுத்தத்துக்குள் வேன் புகுந்தது; பெண் பலி

தரமணி டைட்டல் பார்க் பஸ் நிறுத்தத்துக்குள் புகுந்த மினிவேன் மோதியதில் பெண் பலியானார்.

Update: 2019-12-16 23:00 GMT
ஆலந்தூர்,

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவருடைய மனைவி திலகவதி (வயது 41). இவர், நேற்று மதியம் தரமணி டைட்டல் பார்க் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக அமர்ந்திருந்தார். அப்போது திருவான்மியூரில் இருந்து அதிவேகத்தில் வந்த மினிவேன் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்துக்குள் புகுந்தது.

அப்போது அங்கு அமர்ந்திருந்த திலகவதி மீது மினிவேன் மோதியது. இதில் படுகாயம் அடைந்த திலகவதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி திலகவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில் மினிவேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அங்கிருந்த தடுப்பு கம்பிகளும் சேதம் அடைந்தன.

விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(37) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்