திருப்பத்தூர் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தி.மு.க. எம்.எல்.ஏ. மனு அளித்ததால் பரபரப்பு
திருப்பத்தூர் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. பொதுமக்களுடன் வரிசையில் நின்று மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
அப்போது திருப்பத்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.நல்லதம்பி மனு கொடுக்க காத்திருந்த பொதுமக்கள் வரிசையில் தானும் நின்று கூட்டத்தோடு கூட்டமாக மனு அளிக்க வந்தார். அவரை பார்த்ததும் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், நல்லதம்பி எம்.எல்.ஏ.வை அழைத்து மனுவை பெற்று கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
பின்னர் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியில் இருந்து அவுசிங் போர்டு வரை சுமார் 400 பேர் தள்ளுவண்டி, நடைபாதைகளில் கடை போட்டுள்ளார்கள். தற்போது போலீசார் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என கடைகளை வைக்க கூடாது என கூறுகிறார்கள். எனவே அவர்களுக்கு நகர மையப்பகுதியில் வணிக வளாகம் கட்டி தர வேண்டும்.
திருப்பத்தூரில் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது. அதை இடித்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். ஜவ்வாது மலை புதூர்நாடு பகுதியில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பாதுகாப்பு, அடிப்படை வசதியை கருதி புதிய பஸ் நிலைய கட்டிடம் கட்ட வேண்டும் என மனு கொடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் இருந்து 600-க்கும் மேற்பட்டோர் முதியோர், விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ் அடையாள அட்டை, ஸ்கூட்டர், பசுமை வீடுகள், தெருவிளக்கு, கால்வாய், சாலை வசதிகள், வேலைவாய்ப்பு கேட்டு மனு அளித்தனர்.
கதிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா, தனது கணவர் கிருஷ்ணன் தலையில் கட்டி வந்து இறந்து விட்டார். 3 பெண் குழந்தைகளை வைத்து குடும்பம் நடத்த முடியவில்லை என அழுதார். இதேபோல தாதவள்ளி டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா தனது கணவன் இறந்து விட்டதாகவும், திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோட்டில் வசிக்கும் மூதாட்டி லலிதா, திருமணமாகாமல் உள்ளதால் வாழ வழியில்லை என கூறினார். உடனடியாக அவர்கள் 3 பேருக்கும் விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
திருப்பத்தூர் நகர பழைய பஸ் நிலையம் அருகே சங்கு சக்தி விநாயகர் கோவில் மற்றும் திருப்பத்தூர் டெக்ஸ்டைல்ஸ் மார்க்கெட் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி டெக்ஸ்டைல்ஸ் மார்க்கெட் சங்க தலைவர் சேகர் தலைமையில், 50 பேர் மனு அளித்தனர்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணன், கலெக்டர் அலுவலக மேலாளர் பாக்கியலட்சுமி உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களுக்கு பல் சிகிச்சை அளிக்கப்படும் என கலெக்டர் அறிவித்து இருந்தார். அதன்படி மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கு ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் எம்.கே.செல்வகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் பல் சிகிச்சை அளித்தனர்.