காமனூர்தட்டு மலைப்பகுதிக்கு ரூ.1¼ கோடியில் தார்சாலை அமைக்கும் பணி - அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்
ஆம்பூர் அருகே காமனூர்தட்டு மலைப்பகுதிக்கு ரூ.1¼ கோடியில் தார்சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே 10 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் நாயக்கனேரி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியின் ஒருபகுதியாக காமனூர்தட்டு, பனங்காட்டேரி மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் ஆம்பூர் பகுதிக்கு வர பெரியாங்குப்பம் வழியாக கரடுமுரடான மலைப்பகுதியில் சாலைவசதி இல்லாத மண்சாலையில் கால் நடையாகவே வந்து சென்றனர்.
இதனால் இப்பகுதிக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் பனங்காட்டேரியில் இருந்து காமனூர்தட்டு - பெரியாங்குப்பம் வரை சாலை வசதி ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து பெரியாங்குப்பத்தில் இருந்து காமனூர்தட்டு மற்றும் பனங்காட்டேரி வரை சாலை அமைக்க தமிழக அரசு ரூ.1¼ கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்பேரில் நேற்று சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தலைமை தாங்கினார்.
மாவட்ட வன அலுவலர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜோதிராமலிங்கராஜா, முன்னாள் ஊராட்சி தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் கே.சி.வீரமணி பூமி பூஜையில் கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையாளர்கள் ருத்ரப்பா, நல்லங்கிள்ளி, ஆம்பூர் நகர செயலாளர் எம்.மதியழகன், முன்னாள் தொகுதி செயலாளர் ஆர்.வெங்கடேசன், ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன், அவைத்தலைவர் ரத்தினம், பெரியாங்குப்பம் ஊராட்சி செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் 60 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் சாலைப்பணியை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.