கம்பத்தில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒருவழிப்பாதை - பொதுமக்கள் வலியுறுத்தல்
கம்பத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஒருவழிப்பாதையை அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கம்பம்,
தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் நகரமாக கம்பம் விளங்குகிறது. இந்த நகரத்தின் வழியாக கேரளாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். சாதாரண நாட்களில் அய்யப்ப பக்தர்கள் கம்பம், குமுளி வண்டிப்பெரியார் வழியாக சபரிமலை சென்று வருகின்றனர். இந்தநிலையில் தற்போது சபரிமலை சீசன் என்பதால் தமிழகத்தின் பிறமாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் வாகனங்களில் கம்பம் வந்தடைந்து, அங்கிருந்து குமுளி வழியாக சபரிமலை செல்கின்றனர். பின்னர் அதே வழியாக திரும்பி கம்பம் வந்து, மீண்டும் தங்கள் ஊருக்கு செல்கின்றனர். இதனால் அந்த பாதையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. மேலும் அதற்கேற்றாற்போல் போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதற்கிடையே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் டிசம்பர் 15-ந்தேதிக்குள் கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள கம்பம் மெட்டு மலைப்பாதை பிரிவில் தடுப்புகள் அமைத்து கம்பம் மெட்டு ்பாதை வழியாக சபரிமலை செல்ல ஒரு வழிப்பாதை கடைபிடிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை ஒரு வழிப்பாதை கடைபிடிக்கப்படவில்லை. இதனால் கம்பம் நகர் பகுதிக்குள் மட்டுமின்றி, குமுளி மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் ஓரிரு வாரங்களில் ஏகாதசி, புத்தாண்டு, மகரபூஜை உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கம்பத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஒருவழிப்பாதையை அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.