ஈரோட்டுக்கு விற்பனைக்கு வந்த எகிப்து-துருக்கி நாட்டு வெங்காயம்
ஈரோட்டுக்கு, எகிப்து மற்றும் துருக்கி நாட்டு வெங்காயங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
ஈரோடு,
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடந்த 6-ந்தேதி பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரையும், சின்ன வெங்காயம் ரூ.120 முதல் ரூ.150 வரையும் விலை உயர்ந்து விற்பனையானது. இதனால் பொதுமக்கள் வெங்காயம் வாங்குவதை குறைத்து கொண்டனர். எனினும் சமையலுக்கு வெங்காயம் அவசியம் என்பதால் குறைந்த அளவில் வாங்கிச்சென்றனர்.
இதைத்தொடர்ந்து படிப்படியாக விலை குறைந்து கடந்த ஒரு வாரமாக பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வெங்காயத்தை தற்போது வாங்கத்தொடங்கி உள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது. இந்த வெங்காயம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு நேற்று எகிப்து மற்றும் துருக்கி நாட்டு வெங்காயங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது.
இதில் துருக்கி வெங்காயம் 50 கிலோ எடை கொண்ட 100 மூட்டைகளும், எகிப்து வெங்காயம் 20 கிலோ எடை கொண்ட 10 மூட்டைகளும் ஆகும். இந்த வெங்காயம் ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது. துருக்கி வெங்காயம் ஒன்று ½ கிலோவுக்கு மேல் எடை உள்ளதால் பொதுமக்கள் இதை விரும்பி வாங்கவில்லை. ஆனால் ஓட்டல்களுக்கு அதிக அளவில் வாங்கிச்செல்லப்பட்டது.
இதுகுறித்து வெங்காய வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டிற்கு தற்போது எகிப்து மற்றும் துருக்கி நாட்டு வெங்காயங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த வெங்காயம் அளவில் பெரியதாகவும், காரத்தன்மை அதிகமாகவும் இருப்பதால் ெபாதுமக்கள் வாங்கவில்லை. ஓட்டல்களுக்கு தான் வாங்கிச்செல்கிறார்கள். இதேபோல் மராட்டியம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வழக்கமாக வரும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தான் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச்செல்கிறார்கள். சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது’ என்றார்.