சத்துணவு அமைப்பாளர் வீட்டில், டி.வி.‘செட்டாப் பாக்ஸ்’ வெடித்து தீவிபத்து

சாத்தூரில் சத்துணவு அமைப்பாளர் வீட்டில் டி.வி.செட்டாப் பாக்ஸ் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.

Update: 2019-12-10 21:45 GMT
சாத்தூர்,

சாத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சுதந்திர கிளாரா(வயது48). இவர் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் பன்னீர் செல்வம்(50) பழைய இரும்பு வியாபாரம் பார்க்கிறார். இவர்களது வீட்டில் கேபிள் டி.வி. இணைப்பு உள்ளது. இதற்காக செட்டாப் பாக்ஸ் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல பன்னீர்செல்வம் காலையிலேயே வியாபாரத்திற்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த சுதந்திர கிளாரா சமையலுக்கு பொருட்கள் வாங்க அருகில் இருக்கும் கடைக்கு சென்றார்.

அப்போது வீட்டில் டி.வி. செட்டாப் பாக்ஸ் திடீரென்று வெடித்து மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் டி.வி, பிரிட்ஜ், செல்போன், வீட்டு உபயோக பொருட்கள், துணிமணிகள், சான்றிதழ் அனைத்தும் தீயில் கருகி சேதம் அடைந்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து கொண்டிருக்கும் போது தகவல் அறிந்து சாத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின்போது அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்