ஜோலார்பேட்டையில் 8 மாத பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீச்சு - கல் நெஞ்சம் படைத்த தாய் யார்? போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டையில் 8 மாத பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் கவுண்ட்டர் அருகில் குப்பை தொட்டி உள்ளது. ஜோலார்பேட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வழக்கம் போல் நேற்று அதிகாலை ஜோலார்பேட்டை நகராட்சி பகுதி முழுவதும் தெருக்களை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
துப்புரவு பணியாளர் மல்லிகா மற்றும் துப்புரவு பணியாளர்கள் ரெயில் நிலையம் அருகே குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த குப்பை தொட்டியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. குப்பை தொட்டியை பார்த்த போது, அழகான பெண் குழந்தை இருந்தது.
குழந்தை அழகான உடை அணிந்து, வெள்ளி கால் கொலுசு அணிந்திருந்தது. அதனை பார்த்த மல்லிகா குப்பை தொட்டியில் இருந்து குழந்தையை எடுத்து அக்கம் பக்கம் விசாரித்தார். யாரும் குழந்தையை உரிமை கொண்டாடவில்லை. அதைத்தொடர்ந்து மல்லிகா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அதன்பிறகு இன்ஸ்பெக்டர் பழனி திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் இந்திராணியை வரவழைத்து, 8 மாத பெண் குழந்தை பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆலோசனைபடி, பாய்ச்சல் பசுமைநகரில் உள்ள எஸ்.ஆர்.டி.பி.எஸ். குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகத்தில் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
மேலும் 8 மாத பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யார்? எதற்காக குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.