சிவகங்கை மாவட்டத்தில், வெங்காயம் பதுக்கலா? போலீசார் சோதனை
சிவகங்கை மாவட்டத்தில் வெங்காயம் பதுக்கி உள்ளனரா என்று குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். மேலும் யாராவது வெங்காயம் பதுக்கி இருந்தால் அது குறித்து பொதுமக்கள் தகவல் தரலாம் என்று அறிவித்துள்ளனர்.
சிவகங்கை,
வெங்காயம் விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வெங்காயம் பதுக்கி வைக்கப்படுவதை தவிர்க்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து வெங்காயம் பதுக்கி வைக்கப்படுவதை தடுக்க திடீர் சோதனை செய்ய குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அந்த பிரிவின் இயக்குனர் பிரதீப்வி.பிலிப் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோவன் உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளைச்சாமி மற்றும் போலீசார் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை ஆகிய பகுதியில் உள்ள வெங்காய மொத்த விற்பனை கிடங்குகள் மற்றும் வெங்காய விற்பனை கடைகளில் சென்று அங்கு வெங்காயம் பதுக்கி வைத்துள்ளார்களா என சோதனை நடத்தினர். ஆனால் அங்கு வெங்காயம் ஏதும் பதுக்கி வைக்கப்படவில்லை.
மேலும் இது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் கூறியதாவது:-
வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 9498165931 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.