ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு கடப்பாரை -மண் வெட்டியுடன் வந்தவரால் பரபரப்பு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு கடப்பாரை -மண் வெட்டியுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
எனினும் பொதுமக்கள் தாங்கள் கொண்டுவரும் மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் போடலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த மனுக்களை நேற்று புகார் பெட்டியில் போட்டு சென்றனர்.
இந்து மக்கள் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் பிரகாஷ் என்பவர் கையில் கடப்பாரை மற்றும் மண் வெட்டியுடன் கழுத்தில் ‘ஈரோட்டில் விரைவில் கரசேவை’ என்ற வாசகத்துடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, கடப்பாரை, மண்வெட்டியுடன் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதியில்லை. எனவே அவற்றை வெளியே போட்டு விட்டு உள்ளே செல்லுங்கள்’ என்று அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து அவர் தான் கொண்டு வந்த மண்வெட்டி மற்றும் கடப்பாரையை வெளியில் போட்டுவிட்டு தான் கொண்டு வந்த மனுவை புகார் பெட்டியில் போட்டுச்சென்றார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘ஈரோடு அருேக உள்ள கணபதி பாளையம் காளமங்கலம் பகுதியில் குலவிளக்கு அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கதவின் முகப்பு பகுதியில் அண்ணா, பெரியார், அன்னை தெரசா போன்றவர்களின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
எனவே உடனடியாக இந்த உருவங்களை அகற்றி விட்டு ஈரோடு மக்களுக்காக பாடுபட்ட தீரன் சின்னமலை, காலிங்கராயன், பொல்லான் ஆகியோர் உருவங்களை பொறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்து மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.