திட்டக்குடியில், மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு திட்டக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-09 22:15 GMT
திட்டக்குடி,

திட்டக்குடி அருகே மங்களூர், நல்லூர், சிறுமுளை, பெருமுளை, மேலூர், வையங்குடி, சாத்தநத்தம், ஆதமங்கலம், புதுக்குளம், நாவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் மக்காச்சோளம், பருத்தி, வரகு ஆகியவற்றை சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். பயிர்கள் நன்கு வளர்ந்து வந்ததால், இந்தாண்டு நல்ல வருமானம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால் மக்காச்சோளம், பருத்தி, வரகு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழைநீர் தேங்கியதால், பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பெரும் ந‌‌ஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி வெலிங்டன் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் மருதாசலம் தலைமை தாங்கினார்.

இதில் விவசாயிகள் சிலர் மழையால் சேதமடைந்த பயிர்களை கையில் ஏந்தியபடி கோ‌‌ஷம் எழுப்பினர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவுக்கு பெய்யவில்லை. இதனால் நாங்கள் சாகுபடி செய்த பயிர்கள் தண்ணீரின்றி கருகியதால் பெரும் ந‌‌ஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்தாண்டு பெரும் செலவு செய்து மக்காச்சோளம், பருத்தி, வரகு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பராமரித்து வந்தோம். பயிர்கள் நன்கு வளர்ந்து வந்த நிலையில் தொடர்ந்து பெய்த பருவமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது.

இதனால் எங்களது பயிர்கள் அழுகி சேதமடைந்துள்ளது. இதன் மூலம் எங்களுக்கு இந்தாண்டும் பெரும் ந‌‌ஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே மழையால் சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை தாசில்தார் செந்தில்வேலை சந்தித்து வழங்கினர். அதனை பெற்ற தாசில்தார் செந்தில்வேல் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலூர், வையங்குடி, மங் களூர், நல்லூர் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்