சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்: 385 ஊராட்சி, 20 ஒன்றிய அலுவலகங்களில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி 385 ஊராட்சி மற்றும் 20 ஒன்றிய அலுவலகங்களில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

Update: 2019-12-08 22:30 GMT
சேலம், 

தமிழகத்தி்ல் நெல்லை, தென்காசி, வேலூர், விழுப்புரம் உள்பட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 288 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 385 கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 3,597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயாராக உள்ளன.

இத்தேர்தலில் 16 லட்சத்து 4 ஆயிரத்து 789 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 2,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஊரக உள்ளாட்சி பதவிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும், கிராம ஊராட்சி தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. 385 ஊராட்சி மற்றும் 20 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இன்று (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி மற்றும் ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 27-ந் தேதியும், இரண்டாம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல் மற்றும் வாழப்பாடி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 30-ந் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை அறிவித்துள்ளதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து கூட்டங்களும் ரத்து செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி சிறப்பான முறையில் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்