நாகை அருகே குளத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

நாகை அருகே குளத்தில் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-12-08 22:15 GMT
நாகப்பட்டினம்,

நாகை அருகே மஞ்சக்கொல்லையில் பூங்குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த குளத்தில் நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இதன் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் செல்வத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் நாகை டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

கொலையா?

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் பிணத்தை கயிறு கட்டி இழுத்து கரைப்பகுதிக்கு கொண்டு வந்தனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டாரா? என்பது பற்றி நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளத்தில் பிணம் மிதந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்