அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா திருவண்ணாமலையில் நாளை மகா தீபம் - 2,668 அடி உயர மலைஉச்சியில் ஏற்றப்படுகிறது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை,
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரரும் இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்திஅம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே ஏற்பட்ட ‘தான்’ என்ற அகந்தையை போக்க சிவபெருமான், திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த சிறப்பு வாய்ந்த நாள் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திர தினமாகும். இந்த நாளில் பவுர்ணமியும் வருவது சிறப்பானதாகும்.
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. சிவபெருமான் அக்னிபிழம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா நாட்களில் பல லட்சம் பக்தர்கள் அந்த மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். நாளை மகாதீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறுகிறது.
தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்தமண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். இதையடுத்து பிரம்மதீர்த்தத்தில் ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள்.
அதைத் தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தனாரீஸ்வரர், சாமி சன்னதியிலிருந்து ஆடியபடியே வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தனாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள்.
மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மகாதீபம் ஏற்றப்பட்டதும் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் வீடுகளில் இருக்கும் பொதுமக்கள், பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள்.
மகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மலையில் தீபம் ஏற்றப்படும் வரை தங்கள் வீடுகளிலோ வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்குகள் போடமாட்டார்கள். மகாதீபம் ஏற்றியபிறகே விளக்கு போடுவார்கள். மேலும் தங்கள் வீடுகளிலும் வீட்டின் முன்பும் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள். அந்த நேரம் திருவண்ணாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் காட்சியளிக்கும்.
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக தீபத்தன்று மற்றும் தீபத்திற்கு மறுநாள் பவுர்ணமி தொடங்கும். இந்த ஆண்டு தீபத்திற்கு மறுநாளான வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) காலை 11.10 மணிக்கு தொடங்கி 12-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11.05 மணி வரை பவுர்ணமி உள்ளது. அதனால் பவுர்ணமியன்றும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவை இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. அதனால் இன்று முதல் திருவண்ணாமலை நகர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். திருவண்ணாமலைக்கு வரும் 9 சாலைகளிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு பஸ் நிலையத்திற்கு செல்ல ஆட்டோ வசதி செய்யப்பட்டுள்ளது. ஆட்டோவிற்கு பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோவில் கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குப்பைகளை சாலை மற்றும் தெருக்களில் போடாமல் இருக்க பல்வேறு இடங்களில் குப்பைக் கூடைகள் வைக்கப்பட்டுள்ளன. அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதால் பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 10 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் குவிந்து உள்ளனர். கோவில் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஆளில்லா குட்டிவிமானம் மூலம் பக்தர்கள் கூட்டம் கண்காணிக்கப்பட உள்ளது. இதுதவிர பல்வேறு நவீன சாதனங்கள் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
மகாதீபம் ஏற்றும் மலைஉச்சியில் கமாண்டோ படைவீரர்கள் மலைஏறும் பக்தர்களின் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள். கிரிவலப்பாதையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. செயின் பறிப்பு, திருட்டை தடுக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மகா தீபம் நாளை மாலை 6 மணிக்கு ஏற்றப்படுவதையொட்டி வெளிநாடு, பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வந்து குவிய தொடங்கி விட்டார்கள். அவர்கள் விடுதிகளில் தங்கி உள்ளனர். அதனால் விடுதிகள் பக்தர்களால் நிரம்பி வழிகின்றன. திருவண்ணாமலை நகரம் மற்றும் மாடவீதிகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான பக்தர்கள் கிரிவலம் சென்றபடி உள்ளனர். இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மகா தீபத்தை முன்னிட்டு உணவு விடுதிகள், ஓட்டல்கள், சத்திரங்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்றும், சுகாதாரமாக உள்ளதா? என்றும் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மகாதீபம் ஏற்றியபின்னர் அன்று இரவு தங்க ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற உள்ளது. மகாதீபத்தை தொடர்ந்து 4 நாட்கள் அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடக்கிறது. அதன்படி 11-ந் தேதி இரவு 9 மணிக்கு சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், 12-ந் தேதி அதிகாலையில் அருணாசலேஸ்வரர்-உண்ணாமலையம்மன் கிரிவலமும், இரவில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், 13-ந் தேதி சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 14-ந் தேதி சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதிஉலாவரும் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைகிறது.