கோத்தகிரி அருகே, அரக்கம்பை பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரிப்பு - கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
கோத்தகிரி அருகே அரக்கம்பை பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அதனால் அந்த கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள அரக்கம்பை கிராமத்தில் சுமார் 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் தேயிலை தொழிலாளர்கள் உள்ளனர். இந்த கிராமத்தை சேர்ந்த மக்களின் தேயிலை தோட்டங்கள் கிராமத்திற்கு அருகாமையிலும் சற்று தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இங்கு செல்ல போதுமான பஸ் வசதி கிடையாது. அதனால் கோத்தகிரியில் இருந்து தாந்தநாடு செல்லும் பஸ்சில் சென்று அரக்கம்பை பிரிவு பகுதியில் இறங்கி அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது கிராமத்திற்கு நடந்து சென்று வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி குழந்தைகள் கோத்தகிரியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று விட்டு மாலை நேரங்களில் நடந்தே வீடு திரும்புகின்றனர். தற்போது தாந்தநாடு கிராம பகுதியில் ஆரஞ்சு, பேரிக்காய் உள்ளிட்ட பல மரங்கள் அதிகளவு உள்ளது. இதில் காய்த்து உள்ள பழங்களை உண்பதற்காக கரடிகள் அடிக்கடி தாந்தநாடு, அரக்கம்பை கிராம பகுதியில் உலா வருகின்றன.
மேலும் அந்த கரடிகள் குடியிருப்புகளிலும், அங்குள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளிலும் தொடர்ந்து நடமாடி வருகின்றன. இதனால் தேயிலை பறிக்க செல்பவர்கள், பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவ, மாணவிகள், கரடிகளின் தாக்குதலுக்கு அஞ்சியவாறு உயிருக்கு பயந்து அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- தங்களது கிராம பகுதியில் தொடர்ந்து உலா வரும் கரடிகளால் நாங்கள் பெருத்த பீதியில் உறைந்து உள்ளோம். அதனால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அந்த கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.