பெற்றோர் உயிருக்கு ஆபத்து என்று குறி சொன்னதால் மனமுடைந்த டிரைவர், தூக்குப்போட்டு தற்கொலை

பெற்றோர் உயிருக்கு ஆபத்து என்று சொன்னதால் மனமுடைந்த டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-12-06 23:49 GMT
திருக்கனூர்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த சூலைமேட்டை அடுத்த தாங்கல் தோட்டக்காடு அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர்அன்பழகன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 34), பொக்லைன் எந்திர டிரைவர்.இவருக்கு திருமணமாகவில்லை. திருமணத்துக்காக பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் கைகூடவில்லை.

அதைத் தொடர்ந்து மணிகண்டன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுவை திப்புராயப்பேட்டையில் உள்ள ஒரு கோவிலில் சாமியாரை சந்தித்து குறிகேட்டார்.

அப்போது உங்கள் வீட்டுக்கு நேரம் சரியில்லை. அதனால்தான் திருமணம் கைகூடவில்லை என்று அந்த சாமியார் கூறினார். மேலும் பெற்றோர் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக சாமியார் கூறினார்.

சாமியர் கூறியதை கேட்டு மணிகண்டன் மனமுடைந்தார். சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதனால் அவருடைய பெற்றோர் மணிகண்டனை புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள சித்தி வீட்டில் தங்கி இருக்கும்படி அனுப்பி வைத்தனர். அதன்படி கடந்த சில நாட்களாக மணிகண்டன் அவருடைய சித்தி வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சித்தி வீட்டில் இருந்து வெளியே சென்ற மணிகண்டன் மீண்டும் வீடு திரும்பிவில்லை.

நேற்று முன்தினம் மாலை சுத்துக்கேணி பகுதியில் ஒரு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு மணிகண்டன் பிணமாக தொங்கினார்.

அதுகுறித்து தகவல் அறிந்ததும் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் விரைந்து சென்று மணிகண்டன் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பெற்றோர் உயிருக்கு ஆபத்து என்று சாமியார் குறி சொன்னதால் மனமுடைந்த மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேல் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்