ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் கலெக்டர் அலுவலகம் அமைக்க வேண்டும் - விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை

ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் கலெக்டர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-12-06 22:15 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை), 

லாடவரம் கிராம ஏரிப்பாசன மற்றும் நீர்வடிப்பகுதி விவசாயிகள் சங்கத்தின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லாடவரம் பழனி மற்றும் விவசாய சங்கத்தினர் தமிழக முதல் - அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை நகரின் மையப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சுமார் 20 ஏக்கரில் வாரச்சந்தை மைதானம் உள்ளது. இதற்கு அருகிலேயே தற்போது தற்காலிகமாக அமைந்துள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. மேலும் ரெயில் நிலையம், பஸ் நிலையம், பயணிகள் விடுதி, ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், வணிகவரி அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகியவை இதை சுற்றியே அமைந்துள்ளது.

ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் இருந்து வாலாஜா, ஆற்காடு, மேல்வி‌ஷாரம் ஆகிய நகரங்கள் அருகில் உள்ளன. இதனால் ராணிப்பேட்டை மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிக்கு இந்த சந்தை மைதானம் எளிதாக அமையும்.

ராணிப்பேட்டை நகரின் மையப்பகுதியில் வாரச்சந்தை மைதானம் அமைந்திருப்பதால் அங்கேயே மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த மனுவின் நகலை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்‌ஷினி ஆகியோருக்கும் அனுப்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்