பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்புகளால் முதல்-மந்திரி எடியூரப்பா உற்சாகம் மந்திரிசபையை விரிவுபடுத்த முடிவு
இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளதால், முதல்-மந்திரி எடியூரப்பா உற்சாகம் அடைந்துள்ளார்.
பெங்களூரு,
இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளதால், முதல்-மந்திரி எடியூரப்பா உற்சாகம் அடைந்துள்ளார்.
7 தொகுதிகளில் வெற்றி
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளில் நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடந்தது. இதில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் வருகிற 9-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்த தேர்தலில் பா.ஜனதா அரசு பெரும்பான்மை பலம் பெற 7 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா அதிகபட்சமாக 12 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால் முதல்-மந்திரி எடியூரப்பா மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார்.
தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள்
மந்திரிசபையில் தற்போது 16 இடங்கள் காலியாக உள்ளன. இதில் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படுகிறது. அது போக, பா.ஜனதா மூத்த எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, பசனகவுடா பட்டீல் யத்னால் ஆகியோருக்கும் மந்திரி பதவி வழங்க முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடைத்தேர்தல் முடிவு வெளியான அடுத்த ஒரு வாரத்தில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற்றால், பதவி கிடைக்காதவர்கள் போர்க்கொடி தூக்கும் அபாயம் உள்ளது. அதிருப்தியாளர்களை சமாளிப்பது என்பது எடியூரப்பாவுக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தும்.