‘ஆபரேஷன் தாமரை’ முறையை எடியூரப்பா ஊக்குவிக்கிறார் தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு
பா.ஜனதாவில் இணைந்ததாக கூறப்பட்ட கவுன்சிலர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார்.
பெங்களூரு,
பா.ஜனதாவில் இணைந்ததாக கூறப்பட்ட கவுன்சிலர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். இந்த நிலையில் ‘ஆபரேஷன் தாமரை’ முறையை முதல்-மந்திரி எடியூரப்பா ஊக்குவிக்கிறார் என்று தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
மீண்டும் காங்கிரசுக்கு வந்த கவுன்சிலர்
பெங்களூரு சிவாஜிநகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது சம்பங்கிராம்நகர் வார்டு. இந்த வார்டின் கவுன்சிலராக வசந்த் குமார் உள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் எடியூரப்பாவின் முன்னிலையில் பா.ஜனதா கட்சியில் சேர்ந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ், கவுன்சிலர் வசந்த் குமாருடன் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:-
பா.ஜனதாவுக்கு தோல்வி பயம்
வசந்த் குமார் நேற்று முன்தினம்(அதாவது 3-ந் தேதி) வரை சிவாஜிநகர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். ஆனால் வசந்த் குமார் பா.ஜனதாவில் இணைந்து விட்டதாக சிலர் கூறினர். சிவாஜிநகர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் பா.ஜனதாவுக்கு செல்லவில்லை. இருப்பினும் தோல்வி பயத்தால் பா.ஜனதா தவறான கருத்தை வெளியிட்டுள்ளனர்.
காங்கிரஸ் பிரமுகர்களை பா.ஜனதாவுக்கு இழுக்க பலமுறை பேசியுள்ளனர். ஆசை வார்த்தைகள் கூறி பா.ஜனதாவில் இணையும்படி வற்புறுத்தி உள்ளனர். இந்த வற்புறுத்தல் குறித்து இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு தெரிவிப்பேன். ஏனென்றால் தேர்தல் நடைபெறுவதால் அதுபற்றிய ஆதாரங்களை இப்போது வெளியிட முடியாது.
கீழ்மட்டமான அரசியல்
பா.ஜனதா கீழ்மட்டமான அரசியலை செய்கிறது. இடைத்தேர்தல் முடிவு வந்த பிறகு மாநில அரசியலில் மாற்றம் ஏற்படும். பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்த பா.ஜனதா கட்சி, பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
‘ஆபரேஷன் தாமரை’ முறையை பா.ஜனதா கைவிட வேண்டும். ‘ஆபரேஷன் தாமரை’ முறையை முதல்-மந்திரி எடியூரப்பா ஊக்குவிக்கிறார். இதனால் சட்டவிரோத செயல்களில் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் விஸ்வநாத் மற்றும் பிற தலைவர்களும் ஈடுபட்டு வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களை பா.ஜனதாவுக்கு இழுக்கிறார்கள். இதை அவர்கள் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காபி குடிப்பதற்காக அழைத்து சென்று ஏமாற்றினர்-வசந்த் குமார்
இந்த வேளையில் கவுன்சிலர் வசந்த் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பா.ஜனதா கட்சியில் உள்ள சில நண்பர்கள் காபி குடிப்பதற்காக என்னை அழைத்து சென்றனர். ஆனால் அவர்கள் என்னை அழைத்து சென்று எடியூரப்பாவின் முன்பு நிறுத்திவிட்டனர். இதனால் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. செய்வதறியாது திகைத்தேன். என்னை பா.ஜனதாவினர் ஏமாற்றி அங்கு அழைத்து சென்றுவிட்டனர். இதற்கிடையே, சமூக வலைத்தளங்களில் நான் பா.ஜனதாவில் இணைந்து விட்டதாக செய்திகள் பரவின. இதனால் அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. கட்சிக்கு விரோதமாக செயல்பட்டுவிட்டதாக எண்ணினேன். இதனால் கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவுக்கு போன் செய்து சம்பவம் குறித்து தெரிவித்து மன்னிப்பு கேட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.