கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.278 கோடி பயிர் கடன் - குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி பேச்சு

கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.278 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

Update: 2019-11-30 22:30 GMT
கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், இணை இயக்குனர் (வேளாண்மை) சித்ராதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சிவசுப்பிரமணியன், தோட்டக்கலை துணை இயக்குனர் உமாராணி, வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி பேசும் போது கூறியதாவது:-

தமிழக அரசு விவசாயி களின் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து சிறப்பாகவும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் ரூ.60.27 கோடிக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.22.67 கோடி மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள் இந்த மானியத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். துணை நிலை நீர் மேலாண்மை பணிகளுக்காக பம்புசெட் அமைத்தல், நீர்த்தொட்டி அமைத்தல், நீர்க்குழாய்கள் வழங்குதல் போன்ற திட்டங்களையும் விவசாயிகள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். மின்சார துறையால் செயல் படுத்தப்படும் தட்கல் திட்டத்தின் கீழ் பதிவு செய்த மின் இணைப்புகளை விரைவாக முடித்திட வேண்டும்.

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.340 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் இதுவரை ரூ.278 கோடி பயிர் கடனாக வழங்கப்பட்டு உள்ளது. கோவையில் போதிய மழை பெய்து உள்ளதால் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. எனவே விவசாயிகளுக்கு வருவாய் பெருகிட வேளாண் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசி னார்.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் உள்ளது. இதனால் தேங்காய் உற்பத்தி பாதிப்படைகிறது. எனவே தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் இந்த நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்