தமிழகம் முழுவதும் 600 இடங்களில் கள் இறக்கும் போராட்டம் - ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி
தமிழகம் முழுவதும் 600 இடங்களில் கள் இறக்கும் போராட்டம் வருகிற ஜனவரி மாதம் 21-ந்தேதி நடக்க இருப்பதாக ஈரோட்டில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
ஈரோடு,
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பவானிசாகர் அணை நடப்பு ஆண்டில் முழு கொள்ளளவில் உள்ளது. ஒரு பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள 1 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கருக்கு வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும். அதற்கான தேதியை முன்னதாகவே அறிவித்தால் இப்போது பொழியும் மழையை வைத்து நிலத்தை தயார் செய்ய முடியும்.
மேலும் உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்களை தேடுவதற்கும், வங்கிக்கடன் பெறுவதற்கும், திட்டமிட்டு செயல்படுவதற்கும் ஏற்புடையதாக இருக்கும். எனவே அரசு இவற்றை உணர்ந்து உடனடியாக தண்ணீர் திறப்பு தேதியை அறிவிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கோதாவரி -காவிரி இணைப்பு திட்டம் மற்றும் பாண்டியாறு -மோயாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
கள் இறக்குவதும், பருகுவதும் அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமை. இந்த உரிமையை மீட்டெடுக்கும் வகையில் வருகிற ஜனவரி மாதம் 21-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்பட்டு கள் சந்தைப்படுத்தப்பட உள்ளது.
கள் ஒரு போதை பொருள் என்று நிரூபிப்பவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும். ஆரம்ப கல்வி, ஆரம்ப சுகாதாரம், கால்நடை மேம்பாடு, வேளாண்மை போன்ற துறைகளை மீண்டும் உள்ளாட்சிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சுயேச்சை சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கள் இயக்கம் சார்பில், கள் ஒரு போதை பொருள் என்று நிரூபிக்கப்பட்டால் ரூ.10 கோடி பரிசு என்று எழுதப்பட்டு இருந்த காலண்டர் வெளியிடப்பட்டது.