ரூ.1 கோடி கஞ்சா, போதை ஆயில் பறிமுதல்: பட்டதாரி உள்பட 2 பேர் கைது
கனடா நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த ரூ.1 கோடி மதிப்பிலான ஹைட்ரோ கஞ்சா, போதை ஆயில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பட்டதாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூரு நகரில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் விற்பனை செய்து வருவதாக புகார்கள் வந்தன. அந்த கும்பலை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இணை கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்த மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த அதிப் சலீம் என்ற அபு சலீம் (வயது 25), இவரது கூட்டாளி ரோகித் தாஸ்(26) என்பவரை கைது செய்துள்ளனர்.
இவர்களில் அதிப் சலீம் பி.சி.ஏ. பட்டதாரி ஆவார். இவர், தான் போதைப்பொருள் விற்பனையில் மூளையாக செயல்பட்டு வந்துள்ளார். பெங்களூரு சுத்தகுண்டே பாளையாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 7 மாதங்களாக தங்கி இருந்து அதிப் சலீம் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். அதாவது கனடா நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை, டார்க்வெப் என்ற இணையதளம் மூலமாக அதிப் சலீம் அணுகியுள்ளார்.
அதன்பிறகு, செல்போன் செயலி மூலமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் அவர் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அந்த கும்பலை சேர்ந்தவர்கள், கனடா நாட்டில் இருந்து குழந்தைகளுக்கான பால் பவுடர் டப்பாக்கள் மற்றும் சாக்லெட்டுகளில் ஹைட்ரோ கஞ்சாவை அடைத்து வைத்து, ஆன்லைன் விற்பனையில் ஈடுபட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் கூரியர் மூலமாக நூதன முறையில் பெங்களூருவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதவிர ஆசிஷ் எனப்படும் போதை ஆயிலையும் கனடா நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அந்த ஹைட்ரோ கஞ்சாவை சாக்லெட்டுகளில் அடைத்து வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.2 ஆயிரம் ரூபாய் வரை அதிப் சலீம் விற்பனை செய்து வந்திருக்கிறார். ஹைட்ரோ கஞ்சா சேர்க்கப்பட்டுள்ள சாக்லெட்டுகளை சாப்பிட்டால் சிறுவர்களின் மூளை வளரும் என்று கூறி விற்பனை செய்திருக்கிறார். அதுவும் 8 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் சாப்பிட்டால் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று கூறி விற்றுள்ளனர். குறிப்பாக வசதிபடைத்தவர்களின் பிள்ளைகளை குறி வைத்தே இந்த சாக்லெட்டுகளை விற்று பணம் சம்பாதித்துள்ளனர்.
மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு சுவைகளுடன் கூடிய சாக்லெட்டுகளில் ஹைட்ரோ கஞ்சாவை வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த சாக்லெட்டுகள் பற்றி சில பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அவர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் தான் 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அத்துடன் சிகரெட்டுகளில் அடைத்தும் ஹைட்ரோ கஞ்சாவை அதிப் சலீம் விற்பனை செய்திருக்கிறார்.
தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு கூரியர் மூலமாக ஹைட்ரோ கஞ்சாவை இ-சிகரெட், பால்பவுடர், சாக்லெட்டுகளில் அடைத்து வைத்து அதிப் சலீம் அனுப்பி வந்துள்ளார். ஆசிஷ் எனப்படும் போதை ஆயிலை, பெங்களூரு நகரில் உள்ள ஹூக்கா மையங்களில் அதிப் சலீம் விற்று வந்ததும் தெரியவந்தது.
கைதானவர்களிடம் இருந்து 2 கிலோ 750 கிராம் ஹைட்ரோ கஞ்சா, ஆசிஷ் போதை ஆயில், ஒரு கார், மோட்டார் சைக்கிள், ரூ.1 லட்சம், செல்போன்கள், சிகரெட் பாக்கெட்டுகள், இ-சிகரெட், 12 சாக்லெட்டுகள், ஹைட்ரோ கஞ்சாவை பொடியாக்க பயன்படுத்தப்பட்ட 3 சிறிய எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். கைதான அதிப் சலீம், ரோகித் தாஸ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் ஹைட்ரோ கஞ்சா ஒரு கிராம், ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கனடாவில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட ஹைட்ரோ கஞ்சாவை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சரியாக கவனிக்காமல் இருந்துள்ளனர். இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதே நேரத்தில் கனடா நாட்டில் இருந்து ஹைட்ரோ கஞ்சா கடத்தப்பட்டது குறித்து அமேசான் நிறுவனத்தின் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் கூறினார்.
பேட்டியின் போது மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் உடன் இருந்தார்.