தூங்கிக்கொண்டிருந்த, பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் பொதுமக்களிடம் சிக்கினார்
ராஜபாளையத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் பொதுமக்களிடம் சிக்கினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது30). ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி செல்வி(25) நேற்று முன்தினம் இரவு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த போது மர்மநபர் ஒருவர் செல்வி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.
செல்வியின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதி பொதுமக்கள் மர்ம நபரை மடக்கி பிடித்து தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீஸ் விசாரணையில் ஆவரம்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் அருண்குமார்(20)எனவும், இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிடர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முதல் குற்றவாளி என்பதும்,பல கொள்ளை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.
கடந்த 22-ந்் தேதி ஜாமீனில் வெளியேவந்த இவர் மீண்டும் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிந்து அருண்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இரவு நேரங்களில் இப்பகுதிகளில் மர்மநபர்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும்,போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட மாவட்ட போலீஸ் துணைசூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.