துறையூரில் பரபரப்பு அரிசி ஆலை உள்பட 2 இடங்களில் திருட்டு
துறையூரில் அரிசி ஆலை உள்பட 2 இடங்களில் மர்ம ஆசாமிகள் பணம் மற்றும் ஆவணங்களை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் அரசு ஆஸ்பத்திரி அருகில் சாமிநாதன் நகரில் வசித்து வருபவர் குமார். இவர் சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கூடலூர் சென்று இருந்தார்.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்துள்ளனர். அதில் எதுவும் இல்லாததால், மேைஜயில் இருந்த ரூ.2,500 மற்றும் எல்.இ.டி. டி.வி.யை திருடிச்சென்றனர்.
இதுபோல் துறையூரில் பெரம்பலூர் சாலையில் ஒரு அரிசி ஆலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அரிசி ஆலையை மூடிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
நேற்று காலை வந்து பார்த்த போது, ஆலையின் அறையில் இருந்த இரும்பு பெட்டி மாயமாகி இருந்தது. ஆனால் அதில் பணம் ஏதும் இல்லை என்றும், சில முக்கிய ஆவணங்கள் மட்டுமே இருந்ததாகவும் அரிசி ஆலையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் குமாரின் வீட்டிற்கு எதிரே துரைராஜ் என்பவர் வீட்டிலும், பெரம்பலூர் சாலையில் உள்ள அரிசி ஆலைக்கு எதிரே உள்ள இரும்பு கடை ஒன்றிலும் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள், அங்கே ஒன்றும் இல்லாததால் வெறும்கையுடன் திரும்பி உள்ளனர்.
துறையூர் நகரின் ஒரே பகுதியில் அடுத்தடுத்து 4 இடங்களில் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.