புகாருக்கு போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சேலம் கோர்ட்டுக்கு கத்தியுடன் வந்த வாலிபரால் பரபரப்பு
புகாருக்கு போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சேலம் கோர்ட்டுக்கு கத்தியுடன் வாலிபர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் அஸ்தம்பட்டியில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளது. இங்கு பொதுமக்களின் புகார் மனுக்களை விசாரிக்க கூடிய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதில், பொதுமக்கள் சிறிய வழக்குகளை சமரசமாக முடித்துக்கொள்ளலாம். இங்கு நேற்று காலை வாலிபர் ஒருவர் கையில் கத்தியோடு வேகமாக ஓடி வந்தார். அப்போது, கோர்ட்டில் இருந்த பெண் ஊழியர்களிடம், தான் ஓவியம் வரையும் தொழில் செய்து வருவதாகவும், வேலை பார்த்த இடத்தில் எனக்கு ரூ.7 ஆயிரம் சம்பளம் தர வேண்டும் என தெரிவித்தார். மேலும், இதுபற்றி பலமுறை கேட்டும் பணத்தை தராமல் உரிமையாளர் இழுத்தடிப்பு செய்து வருகிறார் என்றும் குற்றச்சாட்டு கூறினார்.
கையில் கத்தியுடன் அந்த வாலிபர் வந்ததால், கோர்ட்டில் இருந்த பெண் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கோர்ட்டுக்கு விரைந்து வந்து வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
கத்தியுடன் கோர்ட்டுக்கு வந்ததால் வாலிபர் வைத்திருந்த பையில் வேறு ஏதேனும் ஆயுதம் உள்ளதா? என சோதனை செய்தனர். பின்னர் அவர் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, பையில் ஓவியம் வரையக்கூடிய பிரஸ் மற்றும் எலுமிச்சை பழம், பூக்கள், தொப்பி, சாக்லெட், ஓவியம் வரையும் புத்தகம் மற்றும் பல்வேறு இடங்களில் அவர் வரைந்த ஓவியத்தை புத்தகமாக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சேலத்தாம்பட்டியை சேர்ந்த ஏசுநேசன் (வயது 29) என்பது தெரியவந்தது. அவர் கோவில்களில் ஓவியம் வரையும் வேலை செய்து வந்துள்ளார். கொண்டலாம்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் வேலை செய்த வகையில் அவருக்கு ரூ.7 ஆயிரம் தர வேண்டியுள்ளதாகவும், இது தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் கோர்ட்டில் புகார் கொடுக்க வந்துள்ளார்.
இருப்பினும், கத்தியுடன் கோர்ட்டுக்கு வந்தது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரித்தபோது, நான் யாரையும் மிரட்டுவதற்கு கத்தியுடன் வரவில்லை. மாமாங்கம் பகுதியில் சிமெண்டில் சாமி சிலை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாமி சிலையின் கையில் வைக்க வேண்டிய கத்தியை தான் வைத்திருக்கிறேன் என்று ஏசுநேசன் கூறினார். இதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். வாலிபர் ஒருவர் கத்தியுடன் சேலம் கோர்ட்டுக்கு வந்த சம்பவம் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.