செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை - கலெக்டர் பரிந்துரை

செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார். அவர்கள் 2 பேருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கவும் கலெக்டர் பரிந்துரை செய்தார்.

Update: 2019-11-29 23:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பூமலூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரங்கம்மாள்(வயது 75). தங்கம்மாள் (72). இருவரும் அக்காள்-தங்கை ஆவார்கள். இருவரது கணவர்களும் இறந்து விட்டனர். இதில் ரங்கம்மாளுக்கு 4 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். தங்கம்மாளுக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் நடந்து வெவ்வேறு இடத்தில் வசித்து வருகின்றனர்.

இதனால் அக்காள், தங்கை இருவரும் பூமலூரில் வசித்து வருகின்றனர். அவர்களை அவ்வப்போது மகன்கள் கவனித்து வந்தனர்.இந்த நிலையில் அக்காள் ரங்கம்மாள் காசநோயால் அவதிப்பட்டு வந்தார். அவரை மகன்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அப்போது ரங்கம்மாளை பரிசோதித்த டாக்டர்கள், மேல்சிகிச்சைக்கு பணம் அதிகம் செலவாகும் என்று கூறினார்கள்.

இதையடுத்து ரங்கம்மாள் வீடு திரும்பினார். அவருடைய மகன்கள் தாயாரின் மருத்துவ செலவுக்கு அக்கம், பக்கத்தினரிடம் கடன் வாங்க அலைந்து திரிந்தனர். இந்த நிலையில் மகன்கள் தன்னுடைய மருத்துவ செலவுக்காக பணம் கேட்டு அலைவதை பார்த்த ரங்கம்மாள் தன்னுடைய வீட்டுக்கு சென்று தான் சேமித்து வைத்திருந்த பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்து மகன்களிடம் கொடுத்தார். அந்த ரூபாய் நோட்டுகளை பார்த்த மகன்கள் தாய் ரங்கம்மாள் இவ்வளவு பணத்தை சேமித்து வைத்து இருக்கிறாரே என்று ஆச்சரியம் மேலிட்டாலும் அவை அனைத்தும் பணமதிப்பிழக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் என தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் தங்கள் தாயிடம், நீங்கள் சேர்த்து வைத்த பணம் அனைத்தும் செல்லாத நோட்டுகள் என கூறினார்கள்.

இது பற்றி அறிந்த அவரது தங்கை தங்கம்மாளும், வருங்காலத்தில் மருத்துவ செலவு வந்தால் மகன்களிடம் கையேந்த வேண்டாமே என தான் சிறுக, சிறுக சேர்த்து வைத்த பழைய ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்து கொடுத்தார். அந்த பணமும் செல்லாத நோட்டுகள் என அறிந்து மூதாட்டிகள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ரங்கம்மாளிடம் ரூ.22 ஆயிரமும், தங்கம்மாளிடம் ரூ.24 ஆயிரமும் என மொத்தம் ரூ.46 ஆயிரம் செல்லாத நோட்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக சிறுக, சிறுக சேர்த்து வைத்த பணம் தன்னுடைய மருத்துவ செலவுக்கு கூட கைகொடுக்கவில்லையே என ரங்கம்மாள் வருத்தம் அடைந்தார். மூதாட்டிகளிடம் 46 ஆயிரம் செல்லாத ரூபாய் நோட்டுகள் இருப்பது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதை அறிந்த மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுக்கு உதவ முன் வந்தார். மூதாட்டிகளின் ஏழ்மை நிலை அறிந்து அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைப்பதற்காக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி பல்லடம் தாசில்தார் சிவசுப்பிரமணியம் மேற்பார்வையில் வருவாய் ஆய்வாளர் சதீஷ், பூமலூர் கிராம நிர்வாக அலுவலர் கோபி ஆகியோர் விசாரணையில் ஈடுபட்டு கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று மூதாட்டிகள் ரங்கம்மாள், தங்கம்மாள் ஆகிய இருவரையும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைத்தார். பின்னர் இருவருக்கும் முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினார்.

அதன்பிறகு காசநோயால் பாதிக்கப்பட்ட ரங்கம்மாளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி டீனுக்கு பரிந்துரை கடிதத்தையும் அவரிடம் வழங்கினார். மூதாட்டிகள் இருவரும் தங்களின் ஏழ்மை நிலை அறிந்து முதியோர் உதவித்தொகை கிடைக்க உதவிய கலெக்டருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.

இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-

செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளின் ஏழ்மை நிலை அறிந்து அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ சிகி்ச்சை பெறவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வைத்திருந்த 46 ஆயிரம் செல்லாத ரூபாய் நோட்டுகளை திரும்ப மாற்றுவதற்கு வழிவகை இருக்கிறதா? என்பது குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளருக்கு அறிவுறுத்தி உள்ளோம். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி கூறும் போது, ‘மூதாட்டி செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தோம். அவர்கள் இனிமேல் பணமதிப்பிழக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்றனர். ஆதலால் மூதாட்டிகளிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது’ என்றார்.

மேலும் செய்திகள்