அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு: மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக கும்பகோணத்தில் நடைபெற இருந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கும்பகோணம்,
கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு தேவனோடை, கொத்தங்குடி மற்றும் திருவிடைமருதூர் பகுதி மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ள தனி குவாரி திறக்க வலியுறுத்தி நேற்று சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் மாட்டு வண்டியுடன் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று தாசில்தார் பாலசுப்பிரமணியன், தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், மாவட்டசெயற்குழு உறுப்பினர் மனோகரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் ஜீவபாரதி, விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், சி.ஐ.டி.யூ. துணைத்தலைவர் செல்வம், ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ், மாட்டுவண்டி தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள், போலீசார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் வடகிழக்கு பருவ மழை முடிந்த உடன் மாட்டு வண்டியில் மணல் அள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று நடைபெறுவதாக இருந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.