2020-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி தொடங்குகிறது: கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை அறிவிப்பு
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்வு தொடங்குகிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. என சொல்லப்படும் 10-ம் வகுப்பு தேர்வு அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 27-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான கால அட்டவணையை மாநில அரசின் உயர்நிலை கல்வி ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்த அந்த ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் மொழி அதாவது கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள். 30-ந் தேதி அறிவியல், அரசியல் அறிவியல், ஏப்ரல் 1-ந் தேதி 2-வது மொழி ஆங்கிலம், 3-ந் தேதி 3-வது மொழி தேர்வு. 4-ந் தேதி பொருளியல், 7-ந் தேதி கணிதம், சமூகவியல், 9-ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்.
இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரை நடைபெறும். கேள்வித்தாளை வாசிக்க அனைத்து பாட தேர்வுகளுக்கும் 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.
இவ்வாறு ஆணையம் தெரிவித்துள்ளது.