கள்ளக்குறிச்சி அருகே மாடூரில், சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியாக சென்றனர்.

Update: 2019-11-29 21:30 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே மாடூர் சுங்கச்சாவடியில் சுமார் 100 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் சம்பள உயர்வு மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்கம் சார்பில் 2016-ம் ஆண்டில் தொழிலாளர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக ஏற்கனவே சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் நான்கு கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் நேற்று சேலம் மண்டல தொழிலாளர் ஆணையத்தில் தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் பணியாளர்கள் வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதனால் நேற்று மதியம் 12 மணிக்கு மாடூர் சுங்கச்சாவடியில் உள்ள பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் பணிக்குச் செல்லாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுங்கச்சாவடி கட்டணம் வசூல் செய்யும் பணியில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டணம் இல்லாமல் மகிழ்ச்சியாக சென்றனர்.

மேலும் செய்திகள்