தொழிலாளி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு

தொழிலாளி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-11-29 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அடப்பன்வயலை சேர்ந்தவர் சந்தானம்(வயது 42). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அவருடைய அண்ணன் மூர்த்தி என்ற சிவராமகிரு‌‌ஷ்ணமூர்த்திக்கும்(49) இடையே இடப்பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு புதுக்கோட்டை பால்பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சந்தானம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராமகிரு‌‌ஷ்ணமூர்த்தி, அவருடைய மகன் மணி என்ற மணிகண்டன்(26), விஜய் என்ற விஜய்குமார்(25), முருகன் என்ற திருமுருகன்(24) ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்மாலிக் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் மணிகண்டன், விஜய்குமார், திருமுருகன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், இந்த வழக்கில் தொடர்புடைய சிவராமகிரு‌‌ஷ்ணமூர்த்தி குற்றவாளி என்பதற்கு போதிய சாட்சியங்கள் இல்லாததால், அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்