மதுரை பகுதியில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

மதுரை பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.

Update: 2019-11-28 22:30 GMT
மதுரை,

பொங்கல் பண்டிகை முதல் மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. இதன்படி 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி அவனியாபுரத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு நடைபெறும்.

இதைதொடர்ந்து 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெறும். இதை பார்க்க வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும், சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். 10 நாட்களுக்கு முன்பே அதற்கான முன்னேற்பாடுகளை விழா குழுவினா் செய்ய தொடங்கி விடுவது வழக்கம், காளைகளுக்கும், மாடு பிடிக்கும் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து முன்பதிவு செய்து கொள்வார்கள். மேலும் மாடுபிடி வீரர்கள் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே விரதம் இருக்க தொடங்கி விடுவார்கள்.

தினமும் காளைகளை பிடிக்க தீவிர பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்வார்கள், அவர்கள் வளர்க்கும் காளைகளுக்கு கண்மாய்களில் நீச்சல் பயிற்சி, மண்ணை முட்டி சிதறடித்தல், மாதிரி வாடிவாசல் அமைத்து அதன் வழியில் பாய்ந்து வந்து மாடி பிடி வீரர்களை விரட்டுதல் உள்ளிட்ட பல பயிற்சிகளை அளிப்பார்கள். காலை, மாலை என இருவேளைகளிலும் தீவிர பயிற்சி அளிக்கப்படும்.

இதுகுறித்து மதுரை அருகே உத்தங்குடி பகுதியில் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் பாண்டி என்பவர் கூறும்போது, எங்கள் காளை ராமு இதுவரை 20 ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மேலாக பங்கேற்று வெற்றி பெற்று பல பரிசுகளை வென்றுள்ளது. குறிப்பாக அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த காளைக்கு தீவிர பயிற்சியை நேற்று முதல் தொடங்கி உள்ளோம். இதேபோல் மதுரை பகுதியில் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்