இடைத்தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா பண மழை கொட்டுகிறது; சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா பண மழை கொட்டுவதாக சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

Update: 2019-11-28 23:15 GMT
தாவணகெரே,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தாவணகெரேயில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தகுதிநீக்க எம்.எல்.ஏ. பி.சி.பட்டீல் என்னை குறை கூறி கருத்து தெரிவித்துள்ளார். நானும் கட்சி மாறியதாக கூறுகிறார். தோல்வி பயத்தால் இவ்வாறு அவர் பேசுகிறார். அவரது பேச்சுக்கு மதிப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இரேகெரூர் தொகுதி மக்கள் பி.சி.பட்டீலை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

இடைத்தேர்தலில் பா.ஜனதா பண மழை கொட்டுகிறது. பணத்தை கொண்டு வாக்காளர்களை விலைக்கு வாங்க முடியாது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

முன்னதாக பி.சி.பட்டீல் இரேகெரூரில் நிருபர்களிடம் கூறுகையில், “முதல்-மந்திரியாக இருந்தபோது, சித்தராமையா உண்டியல் வைத்திருந்தார். அவர் அதிகளவில் சொத்துகளை குவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மற்றும் முன்னாள் ஆலோசகர் கெம்பையா ஆகியோரிடம் விசாரணை நடத்தினால் அனைத்து விவரங்களும் வெளியே வரும்“ என்றார்.

மேலும் செய்திகள்