வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-11-28 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள ராஜபத்மாபுரம் பகுதியை சேர்ந்த திரளான இருளர் இன மக்கள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள ராஜபத்மாபுரம் கிராமத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் இருளர் இன மக்கள் ஆவோம். நாங்கள் வீட்டுமனை பட்டா கேட்டு அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரையிலும் எங்களுக்கு வீட்டுமனைபட்டா கிடைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக நாங்கள் அரசின் எந்த ஒரு சலுகைகளையும் பெற முடியாமலும் பட்டா இல்லாத காரணத்தால் அரசு வழங்கும் தொகுப்பு வீடுகளையும் பெற முடியாமல் உள்ளோம். எனவே எங்களுக்கு அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் வீட்டுமனை பட்டா வழங்க தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டரிடம் முறையிட வந்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை புரட்சி பாரதம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் மணவூர் மகா தலைமையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்