நீர் மேலாண்மையை வலியுறுத்தி இதய வடிவில் நின்ற பள்ளி மாணவிகள்

நீர் மேலாண்மையை வலியுறுத்தி பள்ளி மாணவிகள் இதய வடிவில் நின்றனர்.

Update: 2019-11-28 22:45 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பருவகால மாற்றங்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் நீர் மேலாண்மை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லுயிர்ப்பெருக்கத்திற்கு மூலாதாரமாக இருக்கும் நீரைச் சேமித்து வைக்கவும் நீர்மேலாண்மையில் ஒவ்வொரு தனி மனிதனும் தன் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவிகள் இதய வடிவில் நின்றனர். அப்போது, மனிதன் உயிர்வாழ இதயத்தின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ, அதைப்போன்று வாழ்வாதாரத்திற்கு தண்ணீரும் முக்கியம். இதை உணர்த்தும் விதமாகவே மாணவிகள் இதய வடிவில் நிற்பதாக கூறப்பட்டது.

வறட்சி ஏற்படும்

மேலும் நிகழ்ச்சியில், நீரை முறையாக சேமிக்காவிட்டால் தட்டுப்பாடு ஏற்பட்டு கடுமையான வறட்சி, பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும். எனவே நீர்நிலைகளை காக்க ஏரி, குளங்களில் அதிக பிராண வாயுவை வெளியிடக் கூடிய மரங்களான அத்தி, ஆலமரம், அரச மரம் உள்ளிட்ட மரங்களை வளர்த்து, பராமரிக்க வேண்டும், என்றும் தெரிவிக்கப்பட்டது.

நீர்நிலை ஆர்வலர் தங்க சண்முக சுந்தரம், பள்ளி மாணவர்களிடையே பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ஆதிரை, உதவி தலைமை ஆசிரியை மணிமேகலை உள்ளிட்ட ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்