திருப்பூரில் கத்தி முனையில் பனியன் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு - வாலிபர் கைது
திருப்பூரில் கத்தி முனையில் பனியன் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் அத்திக்காடுகாலனி பாளையத்தை சேர்ந்தவர் சகஜீவன் (வயது 35). பனியன் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று காலை சகஜீவன் ஸ்ரீநகர் பகுதியில் அவருடைய நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் சகஜீவனிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்து போன அவர் தன்னிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை அந்த வாலிபரிடம் கொடுத்து விட்டார். பின்னர் அந்த வாலிபர் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து சகஜீவன் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பூலுவப்பட்டி சோதனைச்சாவடி அருகே அனுப்பர்பாளையம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் நெருப்பெரிச்சல் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த ராஜா (30) என்பது தெரிய வந்தது.
மேலும் ஸ்ரீநகரில் சகஜீவனிடம் கத்தி முனையில் பணத்தை பறித்து சென்றதும் அவர்தான் என்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.