கலசபாக்கம் அருகே, பெண் அடித்துக்கொலை - பேரன் கைது

கலசபாக்கம் அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது பேரனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-28 22:30 GMT
கலசபாக்கம், 

திருவண்ணாமலையை அடுத்த தேவனாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் நாராயணசாமி. அவருடைய மனைவி சரோஜா (வயது 55). இவர்களுக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

இதில் சரோஜாவின் மூத்த மகள் அமுதா. அவருடைய மகன் செல்வம் (21), சென்னையில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் சென்னையில் இருந்து செல்வம் தேவனாம்பட்டில் உள்ள அவரது பாட்டி சரோஜா வீட்டிற்கு வந்தார். அப்போது அவர், பாட்டியிடம் ரூ.15 ஆயிரம் கேட்டுள்ளார். ஆனால் பாட்டி பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் செல்வத்திற்கும், சரோஜாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு சரோஜா தூங்கி கொண்டிருக்கும் போது செல்வம் உருட்டு கட்டையால் அவரை தாக்கினார். மேலும் கல்லால் நெற்றியில் குத்தி கொலை செய்துவிட்டு, சரோஜா கழுத்தில் இருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் எடுத்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் தப்பி ஓடிய செல்வம் திண்டிவனத்தில் நகையை அடகு வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் செங்கல்பட்டு டோல்கேட்டில் செல்வத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்