தாயை கழிவறைக்குள் வைத்து பூட்டிய 2½ வயது குழந்தை; கதவை உடைத்து போலீசார் மீட்டனர்

தாயை கழிவறைக்குள் வைத்து பூட்டிய 2½ வயது குழந்தையால் தாராவியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை மீட்டனர்.

Update: 2019-11-27 23:25 GMT
மும்பை, 

மும்பை தாராவி சாகுநகர் ஜாஸ்மின் மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் ருஷிகேஷ். மாநகராட்சி ஊழியர். இவரது மனைவி ஹினா. இவர்களுக்கு பரி என்ற 2½ வயது பெண் குழந்தை உள்ளது. ஹினா நேற்று மாலை வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு தனது மகளுடன் இருந்தார். இந்தநிலையில், வீட்டுக்குள் உள்ள கழிவறைக்கு ஹினா சென்றார். அப்போது குழந்தை கழிவறை கதவின் தாழ்ப்பாளை போட்டுவிட்டது.

இந்தநிலையில், ஹினா கழிவறை கதவை திறக்க முயன்றபோது, வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சத்தம்போட்டார். ஆனால் பயன் இல்லை. குழந்தை தான் கதவை பூட்டியிருக்க வேண்டும் என்பதை அறிந்த அவர், குழந்தை பரியிடம் கதவு தாழ்ப்பாளை திறந்து விடுமாறு கூறினார். ஆனால் ஏதும் அறியா அந்த குழந்தையால் தாய் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லை.

இதற்கிடையே அவர் அடுப்பில் வைத்து சென்ற பால்பொங்கி, அடுப்பு அணைந்து புகை வந்தது. இதனால் வீட்டுக்குள் இருந்த குழந்தைக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று பயந்துபோன அவர், அலறித்துடித்த படி சத்தம் போட்டார்.

இவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு வந்தனர். அவர்கள் முதலில் உள்புறமாக பூட்டப்பட்டு இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் கழிவறையின் வெளிப்புறம் குழந்தை பூட்டியிருந்த தாழ்ப்பாளை திறந்து ஹினாவை மீட்டனர்.

தாயை கழிவறைக்குள் வைத்து குழந்தை பூட்டிய இந்த சம்பவத்தால் தாராவியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்