அண்ணாசாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம், குபேர் பஜார் வியாபாரிகள் எதிர்ப்பால் பாதியில் நிறுத்தம்
அண்ணாசாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற குபேர் பஜார் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதியில் நிறுத்தப்பட்டது.
புதுச்சேரி,
ஆக்கிரமிப்புகள் காரணமாக புதுவை நகரின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.. அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அருண் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இருந்தபோதிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிய சில நாட்களிலேயே மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகி வருகின்றன. இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசியல்வாதிகள் சிலரும் ஆதரவாக இருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை அதிகரிகள் தொடங்கி உள்ளனர். நேற்று அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
குபேர் பஜாரில் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள். இதற்கு குபேர் பஜார் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடைகளை அடைத்த அவர்கள் அண்ணாசாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றனர்.
சிலர் சிவா எம்.எல்.ஏ.வை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் துணை கலெக்டர் சுதாகரை தொடர்புகொண்டு பேசினார்.
வியாபாரிகளே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்வார்கள் என்றும் அதற்கு கால அவகாசம் அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதையேற்று 2 நாட்கள் அவகாசம் கொடுத்த அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றனர்.